பந்தாடப்படும் மாகாணசபை அதிகாரங்களை முன்நிறுத்தி முரண்படும் தமிழ்-முஸ்லிம் அரசியல்
வடமாகாணசபைத் தேர்தல் இவ்வருடம் செப்டெம்பர் மாதம் நடைபெறும் என ஜனாதிபதி அவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து அந்த தேர்தலை முன்னிறுத்திய பல்வேறு கருத்துப் பரிமாற்றங்கள் பல மட்டங்களில் இடம்பெற்று வருவதானது இன்றைய இலங்கை அரசியலில் காணப்படும் ஒரு முக்கிய பிரச்சினையாகும். அமைச்சரவை கூட்டங்களில் கூட அமைச்சர்கள் இரு பிரிவினராக பிரிந்துகொண்டு வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடுமளவிற்கு இது ஒரு சூடான விடயமாகியுள்ளது. சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களிடையே இது தொடர்பான பல்வேறு அபிப்பிராயங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இன்றைய நிலையில் அவ்வாறானதொரு தேர்தல் நடக்குமா என்பதே சந்தேகமாகியுள்ள நேரத்தில் நாளாந்தம் பல்வேறு கருத்து முரண்பாடுகள் தோற்றம் பெறுவது இன்று வழமையான ஒன்றாகிவிட்டது.
இந்த ஒன்றுக்கொன்று முரண்பட்ட அபிப்பிராயங்களில் அரசியல் கட்சிகளினதும் அரசியல் இலாபங்களை மையப்படுத்தி செயற்பட்டு வருபவர்களின் கருத்துக்களும், இனவாத அடிப்படையில் சிந்திப்பவர்களின் எண்ணங்களுமே மேலோங்கி காணப்படுவதானது மிகவும் ஆபத்தானதொன்றாகும். இந்த விடயமானது அநேகமான ஜனநாயகவாதிகளும், சமாதான செயற்பாட்டாளர்களும் வேண்டிநிற்கின்ற மீள்நல்லிணக்கத்தை அடிப்படையாக கொண்ட காத்திரமான இன ஒற்றுமைக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஒரு போதும் வழிவகுக்காது என்பதை நாம் அனைவரும் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும்.
‘மாகாண சபை முறைமை’ இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டு ஏறத்தாள கால் நூற்றாண்டுகளின் பின்னர் இந்த சர்ச்சை தொடங்குவதற்கான பிரதான காரணம் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் தமிழ் மக்களை மிகப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள “வடமாகாண சபைத்” தேர்தல் என்பதனாலேயாகும். இந்த தேர்தல் நடக்கும் பட்சத்தில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழர்களால் குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் எண்ணக்கருவில் பிரசவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் (த.தே.கூ.) வட மாகாணசபை கைப்பற்றப்படும் என்ற அச்சமே இதற்கு வழிவகுத்துள்ள பிரதான காரணமாகும். அவ்வாறு தமிழ் மக்களின் கைகளுக்கு இச்சபை செல்லுமிடத்து அதற்குரியதான அதிகாரங்களைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் அபிலாசைகளான தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணயத்துடன் கூடிய ‘தமிழீழத்தை’ அடைவதற்கு இத்தேர்தலில் வெற்றியீட்டும் தமிழ் அரசியல் தலைமைத்துவம் முற்படும் என்பதே இதை எதிர்த்து நிற்கும் சிங்கள பௌத்த கடும்போக்காளர்களின் அடிப்படை கருத்தாகும்.
மேலும் குறித்த தமிழீழ இலக்கினை அடைவதற்காக இவர்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மற்றும் இந்தியா உட்பட்ட சர்வதேச சமூகம் என்பவற்றின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ள எத்தனிப்பர் எனவும் இவர்கள் நம்புகின்றனர். மறுபுறமாக இவ்வாறானதொரு நிலையானது வடக்கு முஸ்லிம்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடும் என வடக்கு முஸ்லிம்களும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் உறுதியாக நம்புகின்றனர்.
சிங்கள பௌத்த கடும்போக்காளர்களின் இன்றைய இந்த அச்சத்திற்கான மற்றோர் வலுவான கடந்தகால நிகழ்வாக 1990 இல் வடகிழக்கு மாகாணங்களை ஆட்சி செய்த வரதராஜப் பெருமாளின் தலைமையிலான மாகாணசபை அரசாங்கம் எடுத்த தன்னிச்சையான முடிவான ‘தனிநாட்டு பிரகடனம்’ அமைந்து காணப்படுகின்றது. அதாவது இந்திய அமைதிப் படையினர் நாட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த காலப்பகுதியில், அப்போது முதலமைச்சர் பதவியிலிருந்த வரதராஜப் பெருமாள் அவர்கள் இலங்கை மத்திய அரசின் எந்தவித ஒப்புதலும் இன்றி ஒருதலைப்பட்சமாக 1990 மார்ச் முதலாம் திகதி அன்று வட கிழக்கு மாகாணங்களை இணைத்த நிலையிலான “தனி ஈழ அரசை” பிரகடனம் செய்தார்.
மேற்கூறிய அனைத்து காரணங்களின் பின்னணியிலும் குறித்த மாகாண சபை தொடர்பாக தற்போதைய அரசியல் அரங்கில் சூடாக முன்வைக்கப்படும் வாதப்பிரதிவாதங்களை நாம் பிரதானமாக பின்வரும் மூன்று அடிப்படைகளில் பிரித்து இனங்காணலாம்:
1.அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட மாகாண சபை முறையை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும். (அதாவது மாகாணசபை என்ற “நச்சுப்பாம்பினை” முழுமையாக இந்நாட்டில் இல்லாமல் செய்ய வேண்டும்);
2.இந்த மாகாண சபைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை புதியதொரு அரசியல் யாப்பு திருத்தத்தின் மூலம் இல்லாமல் செய்ய வேண்டும் (அதாவது “நச்சுப்பல்லை” பிடுங்கிவிட்டு விசத்தன்மையற்ற பாம்பினை மட்டுமே வடக்கிற்கு கொடுக்க வேண்டும்); அத்துடன்,
3.மாகாணசபை முறைமையிலும் அதன் அதிகாரங்களிலும் எந்தவித மாற்றங்களையும் செய்யாது அப்படியே மாகாண சபை முறைமை அமுல்படுத்தப்படவேண்டும். (அதாவது இம்முறைமை நச்சுப்பாம்பாக இருந்தாலும் பரவாயில்லை அந்தப் பாம்பினை எந்தவித மாற்றங்களிற்கும் உட்படுத்தாது அதற்கான அனைத்து அம்சங்களுடனும் அப்படியே வடக்கிற்கும் கொடுக்கவேண்டும்).
இந்த வகையில் இப்பிரச்சினையைப் பார்க்கும்போது, மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படக்கூடாது என்பதை விடவும் தமிழர்களின் கைகளுக்கு இந்த அதிகாரங்கள் போய்விடக்கூடாது என்பதுதான் இதனை எதிர்ப்பவர்களின் அடிப்படைக் குறிக்கோளாகும். இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால், இருபத்து ஐந்து வருடங்களாக தமது கைகளில் இருந்தபோது இந்த மாகாண சபை முறைமை ஒரு நச்சுப்பாம்பாக இவர்களுக்கு தெரியவில்லை; ஆனால் இன்று அந்த சபையானது ஒரு சிறுபான்மை சமூகத்தின் கைகளுக்கு செல்லப்போகின்றது என்ற நிலை வந்தவுடன் அதனை ஒரு கொடிய நச்சுப்பாம்பாக பார்க்கின்ற நிலை பெரும்பான்மை கடும்போக்காளர்களின் மத்தியில் ஏற்பட்டுள்ளமை ஆகும். இந்த அச்சமும் அதிருப்தியும் ஒன்றுகலந்ததன் வெளிப்பாடாக இன்று ஏறத்தாள முப்பதுக்கும் மேற்பட்ட கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் இதற்கு எதிராக ஒன்றுகூடி செயல்பட ஆரம்பித்துள்ளன. உதாரணமாக- பொது பல சேனா, ராவண பல சேன, சிஹல ராவய, சிஹல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி போன்ற பல கட்சிகள் மற்றும் சிவில் இயக்கங்கள் இதில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றன.
இதில் குறிப்பிடவேண்டிய அம்சம் என்னவெனில், இதுவரை காலமும் குறித்த மாகாண சபை முறைமை தொடர்பில் தமது உண்மையான சுயரூபத்தை வெளிக்காட்டாத பல பேரினவாத கட்சிகளும், சிவில் இயக்கங்களும் இன்று தமது இனவாத கொடூர முகத்தை இதற்கு எதிராக காட்ட முன்வந்துள்ளமை யுத்தத்தின் பின்னரான இலங்கை அரசியல் வரலாற்றில் ஒன்றும் வியப்பிற்குரிய விடயமல்ல. இதுபோன்ற பல நிகழ்வுகள் வெவ்வேறு விடயங்கள் தொடர்பாக கடந்த நான்கு ஆண்டுகளிலே பல தடவைகள் இடம்பெற்றுவிட்டன. விடுதலைப் புலிகளின் இராணுவ ரீதியிலான தோல்வியானது வரலாற்றில் என்றுமில்லாத அளவு இன்று இந்நாட்டில் சிங்கள-பௌத்த கடும்போக்காளர்களின் வெளிப்படையான செயல்பாடுகளையும் அராஜகங்களையும் ஓர் புதிய உத்வேகத்துடன் முடுக்கிவிட்டுள்ளது என்றே கூறவேண்டும். விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் இராணுவ ரீதியிலான தோல்வியானது அவர்களின் நீண்ட கால கனவாகிய தமிழீழத்தை மட்டுமின்றி தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைக் கூட இன்று கேள்விக் குறியாக்கியுள்ளதையே இது தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. அதாவது இலங்கையின் அரசியல்யாப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டு ஏனைய மாகாண மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் உரிமைகளைக் கூட இன்று வடக்கு மக்கள் அனுபவிக்க முடியாததொரு நிலையை இது உருவாக்கியுள்ளது.
இதுவரை காலமும் நடைமுறையில் இருந்த மாகாணசபைகள் பெரும்பான்மை சிங்கள ஆட்சியாளர்களின் கைகளிலும் அவர்களின் முழுமையான கட்டுப்பாட்டிலும் இருந்ததானது பெரும்பான்மை கடும்போக்காளர்களுக்கு ஒரு ஆறுதலை கொடுத்து வந்தது. அதனால் மாகாணசபைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை பற்றி அவர்கள் ஒருபோதும் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் வடமாகாணசபை தேர்தலானது அந்த சபையினை தமது கைகளில் இருந்தும் பறித்து விடும் என்பதோடு தமிழீழத்தை ஆதரித்து நிற்போரின் கைகளுக்கு கொடுத்து விடும் என்பதுதான் இப்போதைய பிரச்சினையின் அடிப்படை விடயமாகும். அவ்வாறானதொரு நிலை ஏற்படும்போது அதில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாக அவர்கள் சட்டரீதியாக பயன்படுத்த முனைவார்கள் என்ற அச்சம் இன்று பொதுவாகவே தமிழீழ எதிர்ப்பாளர்களான சிங்கள பெரும்பான்மை மக்களிடம் உருவாகியுள்ளது.
இதில் ஆச்சரியத்தை உண்டுபண்ணும் விடயம் எதுவென்றால், பெரும்பான்மை கடும்போக்காளர்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருப்பினும் சிறுபான்மை சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில முஸ்லிம் மற்றும் தமிழ் அரசியல்வாதிகளும் இந்த பேரினவாத கடும்போக்களர்களுடன் சேர்ந்துகொண்டு ஒரேவிதமான கருத்தினை முன்வைப்பதுதான். சிங்கள-பௌத்த கடும் போக்காளர்கள் எந்த ஒரு சிறுபான்மையின் கைகளுக்கும் (வடக்கில் தமிழர்கள், கிழக்கில் முஸ்லிம்கள்) இந்த அதிகாரங்கள் சென்றுவிடக் கூடாது என்று திடமாகக் கங்கணம்கட்டி நிற்கின்ற தருணத்தில், சில தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைமைகளும் வடக்கில் த. தே. கூட்டமைப்பின் கைகளுக்கு இந்த அதிகாரங்கள் சென்றுவிடக் கூடாது என்பதில் மிக உன்னிப்பாக இருப்பது இன்று தெளிவாக உணரப்பட்டுள்ளது.
இன்று வடகிழக்கில் வாழும் முஸ்லிம்களை தேசிய அரசியலில் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் (ஸ்ரீ.ல.மு.கா.) அகில இலங்கை முஸ்லிம் (மக்கள்)? காங்கிரஸும் (அ.இ.மு.கா.) இந்த பிரச்சினை தொடர்பாக இரண்டு வேறுபட்ட நிலைகளை கொண்டுள்ளன. கிழக்கு மாகாணத்தை தனது முக்கிய அரசியல் தளமாகவும் களமாகவும் கொண்டிருக்கும் ஸ்ரீ.ல.மு.கா. இந்த அதிகாரங்கள் நீக்கப்படக்கூடாது என தனது உயர்மட்ட மாநாட்டில் முடிவெடுத்திருப்பதானது முழுக்க முழுக்க அதன் எதிர்கால அரசியல் நலனை நோக்காகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் தீர்மானமாகும். அதாவது இன்று இல்லாவிட்டாலும் எதிர்காலத்திலேனும் கிழக்கு மாகாண சபையை தாம் கைப்பற்றும்போது இந்த அதிகாரம் தமது கைகளுக்கு கிடைக்க வேண்டும் என்பது இவர்களின் அபிலாசையாகும். அதேநேரம், இந்த முடிவின் மூலமாக வடக்கின் தமிழ் மக்கள் மத்தியிலும் த.தே.கூட்டமைப்பிடத்திலும் ஒரு நல்ல பேரினை சம்பாதித்துக் கொள்ளமுடியும் என்பதும் இக்கட்சியின் உள்நோக்கமாகும். இதனை ஓர் அடைமொழியினூடு சொல்வதானால் “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை பறிக்கும் முயற்சியே” ஆகும். மேலும் கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவின்போது அக்கட்சி எடுத்த முடிவினால் அதிருப்தியுற்றிருக்கும் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் த.தே.கூட்டமைப்பினரையும் திருப்திப்படுத்தும் ஒரு முயற்சியாகவும் இது பார்க்கப்படலாம்.
இவற்றிற்கெல்லாம் அப்பால் மிக முக்கியமாக ஸ்ரீ.ல.மு.காங்கிரஸை பொறுத்த வரையில் அதன் எதிர்கால அரசியல் இருப்பை உறுதிப்படுத்தும் ஒரு முயற்சியாகவும் அதற்கான ஏற்பாடாகவும் இத்தீர்மானம் கருதப்படலாம். இவைமட்டுமன்றி, எல்லாவற்றிற்கும் மேலாக தமது கட்சிக்கு துரோகம் இழைத்தவர்கள் என எந்நேரமும் இக்கட்சியினரால் குற்றஞ்சாட்டலுடன் பார்க்கப்பட்டும் பேசப்பட்டும் வரும் அமைச்சர் றிசாட் பதியுதீன் போன்றவர்களை வடக்கின் தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் இதனை ஸ்ரீ.ல.மு.கா பயன்படுத்த முயற்சிப்பது அது இவ்விடயம் தொடர்பில் எடுத்த முடிவின் மூலம் தெளிவாகின்றது
இந்த விடயத்தில் த.தே.கூட்டமைப்பின் கருத்துக்கு சார்பான கருத்தைக் கொண்டிருக்கும் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் வடக்கின் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாகவோ; இதுவரை அந்த மக்கள் சந்தித்த, அல்லது சந்தித்து வரும் பிரச்சினைகள் தொடர்பாகவோ எதுவித முயற்சிகளும் எடுக்காமையானது அனைவரும் அறிந்ததும் மிகவும் வருந்தத்தக்கமுமான விடயம் என்பதையும் இங்கு அவசியம் பதிவு செய்யவேண்டும். அதாவது வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினை எப்படிப்போனாலும் பரவாயில்லை தமது கட்சியின் இருப்பானது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என சிந்திக்கும் இவர்களின் நிலைப்பாடானது, 1988 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை தொடர்ச்சியாக ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் சார்பாக பாராளுமன்றத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பிவரும் வடக்கு முஸ்லிம்களுக்கு- குறிப்பாக வன்னி முஸ்லிம்களுக்கு- இழைக்கப்படும் ஒரு துரோகமாகவே உணரப்படும். அதுமாத்திரமல்லாது, வடக்கு முஸ்லிம் மக்களுக்காக இருக்கின்ற இந்த ஒரேயொரு ஆறுதலான அரசியல் தலைமைத்துவத்தை நோக்கி இன்னும் இன்னும் பழிவாங்கும் மனோநிலையில் இருந்து கொண்டு ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் இருந்து செயற்படுவதானது அந்த மக்களை மீண்டும் ஒரு முறை அரசியல் அநாதைகளாக்கும் முயற்சியாகவுமே இந்த மக்களின் புறத்தில் பார்க்கப்படும்.
மறுபுறத்தில் வடக்கில் குறிப்பாக வன்னியில் தனது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொண்டிருக்கும் அ.இ.மு. காங்கிரஸானது இதனை எதிர்ப்பதன் காரணம் த. தே. கூட்டமைப்பின் கைகளுக்கு இந்த அதிகாரங்கள் செல்லுமாக இருந்தால் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கும் அவர்களின் எதிர்கால வாழ்வாதார இருப்பிற்கும் ஒரு பாரிய அச்சுறுத்தலாக அது அமைந்துவிடும் என்றும் கருதுவதே ஆகும். காரணம் ஏற்கனவே வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற நடவடிக்கை தொடர்பில் த.தே. கூட்டமைப்பினர் பல முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தியுள்ளதாக இவர்கள் நம்புகின்றனர். குறிப்பாக மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலே காணி இல்லாத முஸ்லிம் குடும்பங்களுக்கு அரச காணிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு அ.இ.மு. காங்கிரஸினால் மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகளுக்கு எதிராக இப்பகுதியைச் சார்ந்த த. தே. கூ. பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களை அணிதிரட்டி அந்நடவடிக்கைக்கு எதிராக வீதிகளில் இறங்கி செயற்பட்ட பல கசப்பான அனுபவங்களை இவர்கள் கண்டிருக்கின்றார்கள். வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை த.தே. கூட்டமைப்பினர் முழுமையாக ஆதரிக்கவில்லை என்ற ஒரு ஆழமான நம்பிக்கை இவர்களிடம் உள்ளது. அதற்கு இயைபாகவே கடந்த காலங்களில் நடந்த சில சம்பவங்களும் அமைந்துள்ளமையானது துரதிஷ்டவசமான ஒன்றேயாகும்.
இதுதவிர யாழ் மாநகர சபையில் நான்கு உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்ற அ.இ.மு.கா.கட்சியானது இன்றும் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்களை முழுமையாக மீள்குடியேற்றுவதில் பல சவால்களை அரசியல் மட்டத்தில் மட்டுமின்றி நிர்வாக மட்டத்திலும் சந்தித்து வருகின்றது. அண்மையில் கூட இக்கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் ஒருவர், மாநகர சபை முதல்வர் முஸ்லிம்களுக்கு எதிராக எல்லா மட்டங்களிலும் செயல்பட்டு வருவதாக ஊடகங்களிலே பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். யாழ்ப்பாணத்திலே 1990 களில் விடுதலைப் புலிகளினால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றுகின்ற விடயத்தில் இன்றுவரை பல அரசியல் மற்றும் நிர்வாக சவால்கள் காணப்படுகின்றமை அடிக்கடி ஊடக செய்தியாக பரிணமிப்பது யாவரும் அறிந்ததே.
வடக்கிலே அரச காணிகளைப் பகிர்ந்தளித்தல், அரச உத்தியோகங்களை வழங்குதல், இந்திய வீடமைப்புத்திட்டத்தை பங்கிட்டுக்கொள்ளுதல், அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளல், அரச அதிகாரிகளின் நியமனம் மற்றும் இடமாற்றம், அரசாங்க நியமனங்கள், அரச உதவிகளையும் மானியங்களையும் வழங்குதல் போன்ற பல்வேறு விடயங்களில் இதுவரை முரண்பாடுகள் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ளன. இத்தகைய தொடர்ச்சியான முரண்பாட்டு நடைமுறைகளும் மனோநிலைகளும் ஒருபோதுமே ஓர் ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கி குறித்த இந்த இரண்டு சமூகங்களையும் நகர்த்தாது என்பதை நன்கு தெரிந்து கொண்ட இந்த தமிழ்-முஸ்லிம் அரசியல்வாதிகளின் இத்தகைய செயற்பாடுகள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகங்களுக்கு அவர்களே இழைக்கும் பாரிய துரோகங்களாகவே பார்க்கப்படும். சிறுபான்மை இனங்களின் அரசியல் தலைமைத்துவங்கள் கொண்டிருக்கும் இவ்வாறான முரணான நிலைப்பாடுகளை நிச்சயமாக பேரினவாதம் தனக்கு சாதகமாக பயன்படுத்தும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.
தமிழ்-முஸ்லிம் இனங்களிடையே ஏற்படும் ஒவ்வொரு பிளவும் (அது அரசியல் மட்டத்திலோ அல்லது சமூக மட்டத்திலோ அமைந்தாலும்) அந்த இரண்டு இனங்களினதும் பேரழிவிற்கே வழிவகுக்கக்கூடியதாக அமையும். அதுதான் எமது கடந்தகால ஒட்டுமொத்த அனுபவங்களினூடு நாம் அனைவரும் கண்டும் கேட்டும் உணர்ந்த யதார்த்தங்களாகும். உண்மையில், இந்த இரண்டு சிறுபான்மை இனங்களும் ஓர் நெருக்கடி மிக்க யதார்த்தங்களின் மத்தியிலேயே வாழவேண்டியவர்களாக இருக்கின்றார்கள். ஏறத்தாள மூன்று தசாப்த கால யுத்தம் முற்றுப்பெற்றுள்ள நிலையில் இன்றும் இந்த இரண்டு இனங்களிற்குமான கட்டமைப்பு ரீதியான முன்னேற்றம், மற்றும் மனோநிலை ரீதியான காயங்களிற்கான ஆற்றுப்படுத்துகை என்பன அவற்றிற்குப் பொறுப்பான நபர்களின் மத்தியிலிருந்து உளப்பூர்வமாக திடமான வகையில் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக இவை அனைத்தும் அரசியல் அரங்கில் கிள்ளுக்கீரையாக பயன்படுத்தும் போக்கே இன்றும் காணப்படுகின்றது.
யதார்த்தத்தின் அடிப்படையில் நின்று பார்க்கும்போது, வடக்கில் வாழும் மற்றுமொரு இந்நாட்டின் சிறுபான்மை சமூகம் என்ற வகையில் வடக்கு முஸ்லிம்களும் அவர்களின் அரசியல் தலைமைத்துவங்களும் இந்த 13 ஆவது திருத்தச்சட்டத்தை குறைந்த பட்சம் இருக்கின்ற அடிப்படையிலேனும் அதனை மாற்றங்களுக்கு உட்படுத்தாமல் வடக்கில் அதனை அமுல்செய்வதற்காக குரல்கொடுக்க வேண்டும். ஆனால் இன்று ஏற்பட்டுள்ள நிலைமையானது மிகவும் வருந்தத்தக்க ஒன்றாகும். குறைந்த பட்சம் இந்தக் கட்டத்திலாவது குறித்த இந்த சூழ்நிலையைத் தோற்றுவித்த காரணிகளை இனம்கண்டு அவற்றை நிவர்த்திக்க முயற்சிக்க வேண்டும்.
இது ஒருபுறம் இருக்க, யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் கூட இன்றுவரை வடக்கின் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் ஒன்றாக அமர்ந்து தமது எதிர்காலம் பற்றி வெளிப்படையாகப் பேச முன்வரவில்லை; காத்திரமான முயற்சிகளின் மூலமாக இந்த இரண்டு இனங்களின் எதிர்கால ஒற்றுமைக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு முன்வரவில்லை. இத்தகைய பின்னின்று தயக்கமுறும் நிலைப்பாடு இந்த இரு சமூகங்களையும் ஒரு இருண்ட யுகத்தை நோக்கிக் கொண்டு செல்வதற்கான வழிகோலாகவே அமைந்துவிடும். இன்று பலதரப்பட்ட காரணங்களின் நிமித்தம் தமிழ்-முஸ்லிம் சமூகங்களிற்கு இடையில் முளைவிட்டு வளர்ந்துவரும் பகைமை உணர்வு பேரினவாத கடும்போக்காளர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பிற்கு தீனி போடுவதாக அமைந்துவிடும்.
இன்றுவரை இந்த இரு இனங்களிடையேயும் ஒற்றுமை, பரஸ்பர புரிந்துணர்வு, மற்றும் நேர்நோக்கான பார்வை என்பன பலவீனமான நிலையிலேயே ஒருவர் மத்தியில் ஒருவருக்குக் காணப்படுகின்றது. இதற்கான பிரதான சூத்திரதாரிகளாக இருப்பவர்கள் இச்சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில அரசியல்வாதிகளும் அவர்களின் சுயநலன்களுடன் கூடிய இனவாதத்தை முன்னிறுத்திய அரசியல் சாணக்கியமுமே ஆகும். இவை ஏற்கனவே அடையாளப்படுத்தியது போன்று இந்த சமூகங்களின் வளமிக்க எதிர்காலத்தின் வீழ்ச்சிக்கு மட்டுமே வழிசமைத்து நிற்கும்.
கடந்த முப்பது வருடகால யுத்தசூழ்நிலையில் இந்த இரண்டு சமூகங்களையும் ஒற்றுமைப்படுத்துகின்ற விடயம் தொடர்பான பகிரங்கமான கருத்தாடல்களுடன் கூடிய செயல்பாடுகளுக்கு விடுதலைப் புலிகளின் முஸ்லிம் சமூகம் தொடர்பான மறைநோக்குப் பார்வைகளும் அவர்களின் முஸ்லிம் விரோத செயற்பாடுகளும் ஒரு பாரிய தடங்கலாக இருந்தது என்பதுதான் யதார்த்தம். தமிழ்-முஸ்லிம் மக்களின் சுபீட்ஷத்துடன் கூடிய ஒருங்கிணைந்த வாழ்விற்கு விடுதலைப் புலிகளிடமிருந்தோ அவர்களின் காய்களாக அப்போது நகர்த்தப்பட்ட தமிழ் அரசியல் தலைமைத்துவங்களிடம் இருந்தோ ஓர் வரவேற்பு அறிவிப்பு உளப்பூர்வமான முறையில் உறுதியாக முன்வைக்கப்படவில்லை. ஆனால் இன்று நிலவும் சமாதான சூழலில் கூட இச் சமூகங்களின் நல்லுறவு தொடர்பிலான முயற்சிகள் காத்திரமான முறையில் இதுவரை எடுக்கப்படாமையானது மிகவும் ஏமாற்றத்தைத் தரும் நிதர்சனமாகவே காணப்படுகிறது.
இந்நிலையில் இன்றைய அவசியமும் அவசரமும் கலந்த அடிப்படைத் தேவையாக அமைவது தமிழ்-முஸ்ஸிம் இனங்களின் செழுமையான எதிர்காலத்தினை நோக்கிய நல்லுறவு மேம்படுத்தல் ஆகும். அதற்கு இந்த இரண்டு சமூகங்களிடையேயும் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டு, தமது தனித்துவங்களையும் கலாச்சார பண்பாட்டு அடையாளங்களையும் இழக்காத வகையிலும், மற்றைய சமூகத்தினரை மதித்தவர்களாகவும்; அவர்களுடைய பிரச்சினைகளைப் புரிந்து அதற்கு இயைந்தாற்போல் தமது நடவடிக்கைகளை முன்னிறுத்தக்கூடியவர்களாகவும் தம்மை மீள்கட்டமைக்க வேண்டும்.
மேலும், அர்த்தபுஷ்டியுடனான சமூகங்களின் “மீள் நல்லிணக்கம்” என்பது ‘உறவுகளைக் கட்டியெழுப்பும்’ இந்த செயல்முறையினூடு தொடக்கிவைக்கப்படலாம். இதற்கான செயற்பாடுகள் குறித்த இந்த இனங்களைப் பொறுத்தவரையில் இரு மட்டங்களில் முன்னெடுக்கப்பட வேண்டும்: அதாவது தமிழ்-முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் மட்டத்திலும்; சாதாரண மக்கள் மட்டத்திலும் ஆகும். இதற்கான ஏற்பாடுகளை முன்னிறுத்தும் வகிபங்கினை குறித்த சமூகங்களில் மதிப்பிற்குரிய அந்தஸ்தில் உள்ள; அவர்களின் சமூகத்தில் அக்கறையுள்ள; அரசியல் தொடர்பற்ற; நடுநிலை நோக்குடைய புத்திஜீவிகள், மதத்தலைவர்கள், வர்த்தக பிரமுகர்கள், மற்றும் மனிதாபிமான ஆர்வலர்கள் என்போர் வகிக்கலாம். இந்த வகையான எல்லாத் தரப்பினரினதும் உளப்பூர்வமான பங்குபற்றலும் அவற்றின் செயற்படுத்துகையுமே எடுக்கப்பட்ட இலக்கின் வெற்றியாகவும் இறுதி வெளிப்பாடாகவும் அமையும். இத்தகைய ஏற்பாடுகளானவை குறித்த இனங்கள் மத்தியிலான காழ்ப்புணர்வுகள்; சந்தேகம்; புரிந்துணர்வின்மை; அச்ச உணர்வு போன்ற உள ரீதியான பிரச்சினைகளைக் களைவதற்கான சந்தர்ப்ப சூழ்நிலையாக அமையலாம். அதேநேரம், இந்த இரண்டு சமூகங்களும் கட்டமைப்பு ரீதியாக எதிர்கொள்ளும் சவால்களிற்கான தீர்விற்கான ஒருமித்த புரிந்துணர்வுடன் கூடிய கலந்துரையாடலாகவும்; அதற்கு அடுத்த கட்டமாக திட்ட வரைபு மற்றும் அதனை நோக்கிய செயற்பாடுகள் என்றவாறாக முன்னிறுத்தப்படலாம்.
இத்தனை அவலங்களையும் துயரங்களையும் அனுபவித்த பின்னரும் கூட எமது வரட்டுக் கௌரவம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையின்மை, புரிந்துணர்வில் பலவீனம், இன மற்றும் பிரதேச சமூக மேலாண்மை உணர்வு போன்ற எதிர்மறை அம்சங்கள் எம்மிடம் கோலோச்சி எம்மை வழிநடத்திச் செல்ல நாம் அனுமதிப்போமாயின் அதன் விளைவுகள் மிகவும் பாரதூரமானதாகவும் நாமே சம்பாதிக்கும் அவலங்களாகவும் அமைந்துவிடும். இவற்றிலிருந்து விடுபட்டு, தமது இனங்களின் அவல இருப்பின் யதார்த்தத்தை நன்கு உணர்ந்து அவற்றை உள்வாங்கியவர்களாக; தமிழ்-முஸ்லிம் நல்லுறவினைக் கட்டியெழுப்பி; பேரினவாத மறைமுக நிகழ்ச்சி நிரலினுள் சங்கமிக்காது செயற்பட்டு வெற்றிகாணவேண்டிய தார்மீகப் பொறுப்பு குறித்த சமூகங்களின் ஒவ்வொரு அங்கத்தவரினதும் கடமையாகும்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வொன்றினை நோக்கிய பயணத்தில் தமிழ்-முஸ்லிம் சமூகங்களின் ஒற்றுமையானது எந்தளவு தூரம் அவசியமானது என்பதற்கு தற்போதைய இந்த நிலைமை சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும். யார் எதனை சொன்னாலும் இந்த மாகாண சபைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை முன்நிறுத்திப் பார்க்கும் போது அது உண்மையிலேயே ஏற்கனவே ஒரு விசப்பல் பிடுங்கப்பட்ட பாம்பேயாகும். புதிதாக பிடுங்குவதற்கு அதனிடம் ஒரு விசப்பல் தானும் இல்லை என்பதே எனது அபிப்பிராயம். அப்படியாயின் இவ்வாறானதொரு விடயத்தில் கூட தமிழ்-முஸ்லிம் மக்களினாலும் அரசியல்வாதிகளினாலும் ஒரு ஒருமித்த முடிவுக்கு வரமுடியாவிட்டால் ஒரு இறுதியான நிரந்தரத் தீர்வு பற்றி நாம் எப்படி சிந்திக்க முடியும் என்பதுதான் இன்று எம் அனைவர் முன்னிலையிலும் எழுந்துள்ள பிரதான கேள்வியாகும்.
-கலாநிதி எம். எஸ். அனீஸ், சிரேஷ்ட விரிவுரையாளர், அரசியல் விஞ்ஞானத்துறை, கொழும்புப் பல்கலைக்கழகம்
Via : http://www.maruaaivu.com/?p=7372

No comments:
Post a Comment